குழந்தையின் மூளைக்கு திருத்தம் வேண்டாம்… பாதுகாப்பான மகிழ்ச்சியான சூழல் வேண்டும்!
குழந்தைகள் தவறுகளால் கற்றுக்கொள்வதில்லை... பாதுகாப்பாக உணரும்போதுதான் வளர்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு உணவகத்தில் நான் கவனித்த ஒரு சிறிய சம்பவம், குழந்தையின் மூளை எப்படி செயல்படுகிறது என்பதை ஆழமாக சிந்திக்க வைத்தது.
ஒரு குடும்பம் அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தது. சுமார் 10–12 வயதுடைய ஒரு சிறுவன் தண்ணீரை டம்ளரில் ஊற்றி குடித்துவிட்டு, மீதமிருந்த தண்ணீரை மீண்டும் ஜக்கில் ஊற்றினான்.
அதைப் பார்த்த தந்தை உடனே,
"உனக்கு அறிவு இல்லையா? ஏன் இப்படிச் செய்தாய்?"
என்று கோபமாகக் கண்டித்தார்.
அந்த சிறுவன் எதுவும் பேசவில்லை. அமைதியாகத் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து உணவு ஆர்டர் செய்யும்போது, அவன் தோசை கேட்டான். அது இல்லை என்று சொன்னார்கள். பிறகு வேறு ஒரு உணவை கேட்டான். அதுவும் இல்லை.
உடனே தந்தை மீண்டும்,
"இல்லாததைத்தான் கேட்பியா?"
என்று அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாகக் கூறினார்.
அந்த அரை மணி நேரத்தில் இரண்டு முறை அந்தக் குழந்தை மனதளவில் காயமடைந்தது.
இப்படிப்பட்ட சிறிய சம்பவங்கள் தினமும் ஐந்து முறை... பத்து முறை... மாதங்கள்... ஆண்டுகள் நடந்தால் என்ன ஆகும்?
அங்கேயே குழந்தையின் மனஅழுத்தம் ஆரம்பிக்கிறது.
பெற்றோர்கள் நினைப்பது ஒன்று... குழந்தையின் மூளை எதிர்பார்ப்பது வேறு
பெரும்பாலான பெற்றோர்கள் நல்ல எண்ணத்தில்தான் குழந்தைகளை திருத்துகிறார்கள்.
"இப்போது சொல்லவில்லை என்றால் எப்போது கற்றுக்கொள்வான்?"
"சிறு வயதிலேயே ஒழுக்கம் வர வேண்டும்."
"தவறு செய்தால் உடனே திருத்த வேண்டும்."
இவை தவறான நோக்கங்கள் அல்ல.
ஆனால் மனித மூளை இதை வேறு விதமாக அனுபவிக்கிறது.
ஒரு குழந்தைக்கு தொடர்ந்து குறைகளை மட்டும் சுட்டிக்காட்டும்போது, அதன் மூளை தகவலை மட்டும் பெறுவதில்லை.
அது உணர்ச்சி வலியை பதிவு செய்கிறது.
தொடர்ந்து கண்டிப்பது குழந்தையின் மூளையில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது?
ஒரு குழந்தை அடிக்கடி அவமானப்படுத்தப்படும்போது, ஒப்பிடப்படும்போது அல்லது கண்டிக்கப்படும்போது, அதன் மூளை பாதுகாப்பு நிலையில் இருந்து பயநிலைக்கு (Threat Mode) மாறுகிறது.
அந்த நேரத்தில்,
- கற்றல் திறன் குறையலாம்.
- கவனம் சிதறலாம்.
- நினைவாற்றல் பாதிக்கப்படலாம்.
- தன்னம்பிக்கை குறையலாம்.
- புதிய விஷயங்களை முயற்சிக்க தயக்கம் உருவாகலாம்.
அப்போது பெற்றோர் கேட்கிறார்கள்:
"ஏன் இவன் இப்படி மாறிட்டான்?"
உண்மையில் குழந்தை மாறவில்லை.
அதன் மூளை பாதுகாப்பு தேடிக்கொண்டிருக்கிறது.
தவறை மட்டும் திருத்த வேண்டாம்... மனதையும் பாதுகாப்போம்
ஒரு குழந்தை தவறுதலாக கண்ணாடியை காலால் தட்டிவிட்டதாக நினைத்துப் பாருங்கள்.
பல வீடுகளில் வரும் முதல் பதில்:
"எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?"
"பார்த்து நடக்க முடியாதா?"
ஆனால் இதற்கு பதிலாக,
"பரவாயில்லை... இதை நான் வேறு இடத்தில் வைத்திருக்க வேண்டும்."
அல்லது
"அட... உன் கால்ல ரொம்ப பலம் இருக்கே! நல்ல Football player ஆகிடுவே!"
என்று சிரித்துக்கொண்டே சொல்ல முடியாதா?
இது தவறை மறைப்பது அல்ல.
முதலில் குழந்தையின் மனதை பாதுகாப்பாக வைத்துவிட்டு, பிறகு வாழ்க்கையை கற்றுக்கொடுப்பது.
மனித மூளைக்கு மிகவும் தேவையான ஐந்து உணர்வுகள்
ஒரு குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு மிகவும் தேவையானவை:
- அன்பு
- பாராட்டு
- அங்கீகாரம்
- பாதுகாப்பு
- "என்னை புரிந்துகொள்கிறார்கள்" என்ற உணர்வு
இந்த உணர்வுகள் கிடைக்கும்போது குழந்தையின் மூளை இயல்பாகவே ஆர்வமாக மாறுகிறது.
அது தானாகவே சிந்திக்கத் தொடங்குகிறது.
தவறுகளை உணர்கிறது.
பொறுப்புணர்வு வளர்கிறது.
பயத்தால் உருவாகும் ஒழுக்கம் நீடிக்காது
பயப்படுத்தி உருவாக்கப்படும் ஒழுக்கம் பெரும்பாலும் தற்காலிகமானது.
ஆனால்,
மகிழ்ச்சியில் வளர்ந்த பொறுப்புணர்வு வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடும்.
குழந்தைகள் கட்டளைகளால் அல்ல...
அவர்கள் அனுபவிக்கும் குடும்பச் சூழலால் அதிகமாக கற்றுக்கொள்கிறார்கள்.
உங்கள் குழந்தைக்கு இன்று என்ன கொடுக்கப் போகிறீர்கள்?
அதிகமான அறிவுரைகளா?
அல்லது...
அதிகமான அன்பா?
ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தை,
"நான் பாதுகாப்பாக இருக்கிறேன்."
"என்னை ஏற்றுக்கொள்கிறார்கள்."
"தவறு செய்தாலும் நான் கற்றுக்கொள்ளலாம்."
என்று உணர்ந்தால்,
அந்த மனநிலையே அவர்களின் எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாக மாறும்.
முடிவில்...
குழந்தைகளுக்கு ஒவ்வொரு தவறுக்கும் திருத்தம் தேவையில்லை.
ஒவ்வொரு நாளும் பாதுகாப்பான, அன்பான, மகிழ்ச்சியான சூழல் தேவை.
ஏனெனில்,
மகிழ்ச்சியான மூளை வேகமாக கற்றுக்கொள்கிறது.
பாதுகாப்பாக உணரும் மனம் பொறுப்புள்ள மனிதனாக வளர்கிறது.
அன்பைப் பெற்ற குழந்தை உலகத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது.
குழந்தையின் எதிர்காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு...
அவர்களின் மனநலமே.